வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ளபாதிப்பு நிகழாமல்தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்


ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நிகழ்கின்ற,வெள்ளபாதிப்பிற்கு தீர்வுகாணவும் மற்றும் பாதுகாப்பற்ற வளர்ச்சிநடைமுறைகளை மீளாய்வுசெய்யவும் உடனடி நடவடிக்கை அவசியம் என குடியிருப்பாளர்கள் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 28, 2024: சென்னை பெருநகர மேம்பாட்டு வாரியத்தின் (CMDA) கீழ், சென்னை பெருநகரின் ஒரு அங்கமாக தாம்பரத்திலிருந்து வெறும் 3 முதல் 4 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூர் என்ற இரு கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தின்போது வெள்ள பாதிப்பையும், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிலமேம்பாடு நடவடிக்கைகளினால் கடும்சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை வேண்டுகோள்களும், மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற போதிலும் கூட தொடர்ந்து மோசமாகிவரும் சூழ்நிலைக்கு நல்ல தீர்வுகாண உருப்படியான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இந்த கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இப்பிரச்சனைகள் இருந்துவருகின்றன.
பிரச்சனையின்பின்னணி
வெளிவட்டச்சாலையின் (ORR) பகுதி மற்றும் அடையாறு ஆற்றின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள், குறிப்பாக, ராயப்பாநகர் இந்த பருவமழைக்காலத்தின்போது மழைவெள்ள நீரால்சூழப்பட்டு, தத்தளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இப்பிரச்சனை கீழ்க்கண்ட காரணங்களால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது:
மழை நீர் மற்றும் வெள்ள நீர் இயற்கையான முறையில் வடிந்து அடையாறு ஆற்றுக்குள் செல்வதை தடை செய்வதாக வெளிவட்டச்சாலை இருக்கிறது மற்றும் இதன் கீழ் நீர் செல்வதற்காக போதுமான சிறுபாலங்கள் அமைக்கப்படவில்லை.
கிஷ்கிந்தா – தாம்பரம் சாலை நெடுகிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் முறையான வெளியேறல் வழி இல்லாமல் மழை நீரானது, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பல நாட்களுக்கு நீர் வடியாமல், வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கும் வகையில், வரதராஜபுரம் மற்றும் எருமையூரின் ஒரிஜினல் குடியிருப்பு பகுதிகளையொட்டி தாழ்வான பகுதிகளில் புதிதாக 96 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ஒரு குடியிருப்பு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. தரைமட்டத்தை 7 முதல் 12 அடிவரை உயர்த்தும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் மண் இப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது, இயற்கையாக தண்ணீர் வடியும் வாய்க்கால்கள் பலவற்றை இந்த நடவடிக்கை மண்ணுக்குள் புதைத்திருக்கிறது. புல எண்கள் 447, 445, 454, 444 மற்றும் பிறவற்றில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பலசிற்றாறுகள் மற்றும் ஓடைகள் இதில் உள்ளடங்கும். இந்த தண்ணீர் வாய்க்கால்களும், ஓடைகளும் அடைக்கப்பட்டிருப்பது, இதுவரை வெள்ள பாதிப்பின்றி பாதுகாப்பாக இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மழை வெள்ள நீர் திசை திருப்பிவிடப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. இதன்காரணமாக, மேடான பகுதிகள் கூட இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்படுபவையாக மாற்றப்பட்டிருக்கின்றன.
உள்ளூர் சமூகங்கள் மீது பாதிப்பு
ஒழுங்குமுறைப்படுத்தாத இந்த நிலமேம்பாடுதிட்டம், பேராபத்தை உண்டாக்கும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது:
மழை நீர் சூழ்வதால், ஏற்படசாத்தியமுள்ள பேரழிவை தவிர்ப்பதற்காக இப்பகுதியில் உள்ள பள்ளிகள், அவைகளின் தரைத்தளங்களை காலி செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன.
எம்.ஜி.ஆர் சாலை, பஜனை கோவில் தெரு, அம்பேத்கார் சாலை, முனுசாமி சாலை, ஜைடிகோ லே அவுட், ஓம் சக்தி நகர் ஆகியவை உட்பட, பலமுக்கியமான குடியிருப்புபகுதிகள், கடுமையான வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் ஆபத்தில் இப்போது இருக்கின்றன.
கிராம கோவில் மற்றும் அங்கன்வாடி உட்பட, உள்ளூர் அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள், மழைவெள்ள நீரினால் மோசமான ஆபத்தை இப்போது எதிர்கொள்கின்றன.
இதுவரை தாழ்வாக இருந்த பகுதியில் புதிதாக மிகப்பெரியமனைப்பிரிவு உருவாக்கப்படுவதன் காரணமாக இதுவரை கிராமத்தில் மேடான பகுதியில் அமைந்திருந்த குடியிருப்புகள் திடீரென வெள்ளநீர் சூழக்கூடிய தாழ்வான பகுதியாக இப்போது மாறி இருக்கின்றன.
குடியிருப்பாளர்களின் கோரிக்கைகள்
கடும் ஆபத்தையும், பெரும் சிரமத்தையும் எதிர்கொள்கின்ற வரதராஜபுரம் மற்றும் எருமையூர் கிராமங்களில் வசிக்கும் மக்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உடனடியாகவும் மற்றும் நிரந்தர தீர்வு வழங்குமாறும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசையும், பிற அதிகார அமைப்புகளையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றனர்:
அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க கான்கிரீட் சுவர்கள் கட்ட வேண்டும்.
மழை மற்றும் வெள்ள நீர் தடையின்றி ஓடுவதற்கு ORR -ன் கீழ் போதுமான மதகுகளை / சிறுபாலங்களை அமைக்கவும்.
பொதுப்பணித் துறை (PWD / WRD) கிஷ்கிந்தா-தாம்பரம் சாலையில் மழைநீர் கால்வாய்களை உருவாக்கி, அடையாறு ஆற்றுக்குள் பாதுகாப்பாக தண்ணீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரிஜினல் குடியிருப்புகளை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிதாக உருவாக்கப்படுகின்ற மனைப்பிரிவில் புதைந்துபோன இயற்கையான நீர் வழித்தடங்களை மீண்டும் திறந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவும்.
உடனடி நடவடிக்கைக்கான அறைகூவல்
மாநிலம் எங்கிலும் வெள்ள பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னுரிமை அளித்துவரும் நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இந்த பிரச்சனை தீர்வுகாணப்படாமல் விடப்பட்டிருப்பது வியப்பையும், வருத்தத்தையும் அளிக்கிறது. உரிய நடவடிக்கைகளின் மூலம் பேராபத்து நிகழாமல் தடுக்கக்கூடிய இப்பிரச்னைக்கு துரித நடவடிக்கைகளை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் எடுக்கவேண்டும் என்று குடியிருப்பாளர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளனர். வெள்ள நீர் பாதிப்பிலிருந்து குடிமக்களை பாதுகாக்கின்ற கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருப்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம்.
இதற்கான பொறுப்பு வகிக்கும் அதிகார அமைப்புகள், ஊடகத்தினர் மற்றும் பொது மக்களின் கவனத்தை இந்த வேண்டுகோள் ஈர்க்கும் மற்றும் பேராபத்து நிகழ்வதற்கு முன்பு உரிய தீர்வுகளை அரசு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்கவும் மற்றும் மேலதிக விவரங்களைப்பெறவும் தயவு செய்து தொடர்புகொள்க:
ஜோஸ்புன்னூஸ்
(வரதராஜபுரம் மற்றும் எருமையூர் குடியிருப்பாளர்கள் சார்பாக)
+91 93810 63318
பின்னிணைப்பு: வரதராஜபுரம் கிராமத்தின் வரைபடம்:

