மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் 96வது மறு ஒன்றுகூடல் விழா சென்னையில் தொடக்கம்!.
சென்னை மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் 96வது மறு ஒன்றுகூடல் ஆண்டு விழா சென்னை முகப்பேர் மார் இவானியோஸ் நகர் பகுதியில் உள்ள மார் கிரிகோரியஸ் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காக்கி-புனே மறைமாவட்ட பேராயர் டாக்டர் மாத்யூஸ் மார் பச்சோமியோஸ், ஷாஜி வாழை அருட்தந்தை மோன்சின்யோர், விகார் ஜெனரல் அருட்தந்தை மாத்யூ பல்லிக்குன்னேல் ஆகியோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கினர்.
எஃப்ரேம் மறைமாவட்டம் சார்பில் செப்டம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், குருக்கள், துறவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 1930ஆம் ஆண்டு வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கத்தோலிக்க திருச்சபையுடன் மீண்டும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்த மறு ஒன்றுகூடல் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
விழாவின் தொடக்கமாக தீப்பந்த ஊர்வலம், கொடியேற்றம் மற்றும் வேதாகம மாநாடு நடைபெறுகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி திருச்சபையின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் 150க்கும் மேற்பட்ட குருக்கள் பங்கேற்கும் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மேலும் ஏழை மற்றும் விளிம்புநிலை குடும்பங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 5 வீடுகளின் சாவிகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
மேலும், தர்ம ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, சமூக சேவையில் விசுவாசிகள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
மூன்று நாள் நடைபெறும் இந்த மறு ஒன்றுகூடல் விழா, திருச்சபை ஒற்றுமை, ஆன்மீகப் புதுப்பித்தல் மற்றும் சமூக சேவையை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

