சென்னை, அக்டோபர் 23, 2021
இந்தியாவின் முன்னணி குடல்நோய் நுண்துளை சிறப்பு மருத்துவமனையான சென்னை ஜெம் மருத்துவமனை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்துடன் இணைந்து, பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் வகுப்பை துவக்கியது. தங்களது நுண்துளை குடல் அறுவை சிகிச்சை மற்றும் குடல் மேலாண்மை திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பிய மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை ஜெம் மருத்துவமனையில் நடந்த துவக்க விழாவில், தலைமை விருந்தினராக சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., பங்கேகற்று துவக்கி வைத்தார். கவுரவ விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லுாரியின் பேராசிரியர் டாக்டர் பி. கிருஷ்ணா ராவ் பங்கேற்றார்.
துவக்க விழாவில், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு பேசியதாவது: பெருங்குடல் புற்றுநோய்க்கு, ஜெம் மருத்துவமனை தான் முதல் முறையாக லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்தது என்பதில் பெருமை கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய்க்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். குடல் நோய் அறுவை சிகிச்சை தொடர்பான, “பால்ஸ் கொலரெக்டல் 2021” அறுவை சிகிச்சை பயிற்சி வகுப்பை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்துடன் (ஐஏஜிஇஎஸ்) இணைந்து, அக்டோபர் 22 முதல் அக்டோபர் 24 வரை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பெருங்குடல் நோய் அறுவை சிகிச்சையில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள், இந்த சான்றளிப்பு வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.
லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சையில் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், பல்வேறு வகையான சிகிச்சைகளில் கையாளப்பட்ட முறைகள் பற்றி விளக்கும் நோக்கத்துடன் இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து, அவற்றை பற்றி விவாதிக்கவும், மலக்குடல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விவாதங்கள், குழு விவாதங்கள், சிறப்பு சொற்பொழிவுகள், ஒளிப்பட விளக்கங்கள் போன்றவை நிபுணத்துவமும் அனுபவமும் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நடத்துகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.