எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முற்றுகை !

எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முற்றுகை !

எஸ்.டி.பி.ஐ கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்பர் அலி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது , மாநில செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் .

மேலும் , இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டத் தலைவர் பொதுச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்

முற்றுகை போராட்டத்தில் கண்டன உரையாற்றிய மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது , ” கடந்த மார்ச் 25 ம் தேதி , எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்பர் அலி மீது , விழுப்புரம் மாவட்ட தமுமுக தலைவர் முஸ்தாக் தலைமையில் , மமக நிர்வாகி பசல் முகமது உட்பட கூலிப்படையை சேர்ந்த ரஜப் , பாஷா , அசாருதீன் ,
நந்திவர்மன் , ராஜ்குமார் ஆகியோர் இணைந்து ஆயுதங்களை கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அக்பர் அலி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்னார் .

தாக்குதல் தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆயினும் தாக்குதலில் தொடர்புடைய சூத்திரதாரியான முஸ்தாக் மற்றும் மமக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காவல்துறை அமைதி காத்து வருகிறது ,தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவிக்கும் நிலையில் , முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதது ஏன் ? ஆளும் கூட்டணியை சேர்ந்தவர் என்பதால் , அவர்களை பாதுகாக்க காவல்துறை முயற்சி மேற்கொள்கிறதா ? என்ற கேள்வி எழுகிறது .

ஆகவே , தமிழக காவல்துறை எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அக்பர் அலி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளிக்கு துணை போகாமல் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை எஸ்டிபி.ஐ . கட்சி நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறேன் . ” என தெரிவித்தார் .

District News