சென்னை, மார்ச் 8, 2022: நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்களுக்கான சிகிச்சை சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், ஆசியாவில் மிகப்பெரிய சுகாதார பராமரிப்புக் குழுமங்களுள் ஒன்றாக செயலாற்றி வருகிறது. ஜியோ இந்தியா ஃபவுண்டேஷனின் மகளிர் தின கொண்டாட்டமான ‘வொண்டர் வுமன் ஃபெஸ்ட் 2022’ – ன் ஒரு பகுதியாக சென்னை மாநகரில் மார்ச் 8 – ம் தேதியன்று முக்கியமான மெட்ரோ இரயில் நிலையங்களில் நீரிழிவுக்கான பரிசோதனை முகாமை இலவசமாக இது நடத்துகிறது. தேனாம்பேட்டை, ஆலந்தூர், விமானநிலையம், வடபழனி மற்றும் கோயம்பேடு தலைமையகம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் நீரிழிவுக்கான இலவச பரிசோதனைகளை செய்துகொள்ள இம்முகாம் வகை செய்கிறது.
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஆர்.எம். அஞ்சனா மகளிர் தின சிறப்பு நிகழ்வுபற்றி கூறியதாவது: “இந்தியாவில் பெண்கள் மத்தியில் நீரிழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதுமான உடலுழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உறுதியான சான்று வெளிவந்திருக்கிறது. பெண்கள், குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உடல்சார்ந்த விளையாட்டுகளில் பங்கேற்க வசதியோ அல்லது அதற்கான சூழலோ இருப்பதில்லை. விருப்பமுள்ளவர்களுக்கும் அதை தவிர்க்குமாறே அறிவுறுத்தப்படுகிறது. சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான கண்ணோட்டங்களின் காரணமாக உடற்தகுதிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வசதியும், வாய்ப்பும் மிக குறைவாகவே அவர்களுக்கு இருக்கிறது. கிராமங்களில் வாழும் பெண்களால் இருட்டியதற்குப் பிறகு வீட்டிற்கே வெளியே செல்ல இயலாது; கள விளையாட்டுகளில் விளையாடவோ அல்லது உடல் ஆரோக்கியத்திற்கான கிளப்களில் இணையவோ இயலாது. அத்துடன் தனது சொந்த உடல்நலத்திற்காக செலவிட நேரமும் அப்பெண்களுக்கு கிடைப்பதில்லை. அணியும் ஆடைகளே உடல்சார் விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சியை தடுக்கக்கூடிய ஒரு காரணியாகவும் இருக்கின்றன. நமது கலாச்சார, மரபு சார்ந்த கண்ணோட்டங்கள் மற்றும் தயக்கங்களின் காரணமாக, தேசம் முழுவதும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாக இது இருக்கிறது. நீரிழிவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பெண்கள் பின்பற்றி நடக்குமாறு செய்வதற்கு சமூக ரீதியில் ஏற்கக்கூடிய வழிமுறையை கண்டறிவதும் அதற்கான திட்டத்தை செயல்படுத்துவதும் அவசியமாகும். குடும்பத்தின் பராமரிப்பாளராக திகழும் பெண்கள், அவர்களது உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்