திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த வெரையூர் காவல் நிலைய போலீசார் கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறந்து மிதந்திருந்த 3 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் கார்த்திகேயன் என்பவரது மகன் நான்காம் வகுப்பு பயின்று வந்த தரணிதரன், ஜெயப்பிரகாஷ் என்பவர் மகன் இரண்டாம் வகுப்பு பயின்ற விக்னேஸ்வரன், வீரமணி என்பவரது மகன் எல்கேஜி பயின்று வந்த வீரன் ஆகிய மூன்று சிறுவர்களின் தாய்மார்கள் இன்று ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அதே கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் வீட்டில் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர், அப்போது ஆழமான பகுதியில் சிறுவர்கள் சென்றபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர், 100 நாள் வேலைக்கு சென்ற தாய்மார்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சிறுவர்களை தேடும்போது ஏரியில் சிறுவர்களின் உடல் மிதந்திருப்பதாக தகவலறிந்து தாய்மார்கள் அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் கிராம மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் காவலர்கள் விரைந்து வந்து கிராம மக்களின் உதவியுடன் நீரில் மிதந்து வந்த சிறுவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் ஆருத்ராபட்டு சுற்றுவட்டார கிராம பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.