15 நாட்களுக்குள் தமிழக அரசு, துறைமுக பொறுப்பு கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து டீசல் விலை ஏற்றத்தாலும், கடந்த 8 வருடங்களாக வாடகை ஏற்றாமல் இருப்பதாலும் லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது கூறியதாவது,
டீசல் விலை ரூ.100 தாண்டி இருப்பதால் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களாகிய எங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால் எங்களுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும், துறைமுக இயக்குநரும் தலையிட்டு வாடகை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் துறைமுகம் வாயிலாக மத்திய அரசு ரூ.பல கோடி வருமானம் ஈட்டுகிறது. மத்திய அரசின் செஸ் வரியை குறியை குறைத்து டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் வண்டிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபிநாத் கூறியதாவது,
கண்டெய்னர் லாரி வாடகை கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. தொடர்ந்து டீசல் விலை ரூ.100 ஐ தாண்டி செல்வதால் லாரி உரிமையாளர்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை.
எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் வாடகை தொகையிலிருந்து 40 முதல் 50 சதவிகிதம் உயர்த்தி தர தமிழக அரசும், துறைமுக பொறுப்பு கழகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக 11 சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இன்னும் 15 நாட்களில் வாடகை உயர்வு குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் வேலைநிறுத்தம் என்பதை தாண்டி எங்களால் வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதால் நவம்பர் 15 ஆம் தேதி முதல் லாரிகளை இயக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.