கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொரசபப்ட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி கடந்த 40 ஆண்டிற்கும் மேலாக வழிபாடு செய்து வந்த நிலையில், பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி வருவாய்த்துறையில் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன் அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கட்டபட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலம் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன் அவர்கள் நேரடி பார்வையிலும், திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சங்கராபுரம் வருவாய்த்துறை வட்டாட்சியர் சையத் காதர், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.